சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி மையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வந்தார். அவருக்கு சேலம் விமான நிலையத்தில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து காரில் தனது சொந்த ஊரான எடப்பாடியை அடுத்த நெடுங்குளம் ஊராட்சிக்குட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்திற்கு பகல் 12.25 மணி அளவில் சென்றார். அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி மையத்தில் அவர் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார். எடப்பாடி பழனிசாமியுடன் அவரது மனைவி ராதா, மகன் நிதின்குமார், மருமகள் சங்கீதா ஆகியோரும் வந்து ஓட்டுப் போட்டனர்.
இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நெடுங்குளம் கிராம ஊராட்சிக்கான 9 வார்டு உறுப்பினர்களும் ஏற்கனவே போட்டியின்றி தேர்வாகிவிட்ட நிலையில் நெடுங்குளம் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
வாக்களித்த பின்னர் சேலம் நெடுஞ்சலை நகரில் உள்ள வீட்டிற்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். நாளை (28-ந் தேதி) காலை காமலாபுரம் விமான நிலையம் செல்லும் அவர் அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
இதையொட்டி அவர் செல்லும் வழியில் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தீபாகானிகேர் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
சொந்த ஊரில் வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி